செய்திகள்
15 பேர் கொண்ட கும்பலையும், அவர்களை கைது செய்த வனத்துறையினரையும் படத்தில் காணலாம்.

வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டையாடிய 15 பேர் கைது

Published On 2021-08-05 14:43 IST   |   Update On 2021-08-05 14:43:00 IST
வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டையாடிய 15 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர்-சிறுநிலா இடையே வனப்பகுதியில் ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி குகனேசன் உத்தரவின்பேரில், வேப்பந்தட்டை வனசரக அலுவலர் மாதேஸ்வரன், வனவர்கள் பாண்டியன், சுப்பிரமணியன் மற்றும் வனக் காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது அப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 15 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட 3 முயல்கள், வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முயல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா கல்லை கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் (வயது 60), செல்வம் (30), சரவணன் (24), கண்ணுசாமி (38), மோகன்ராஜ் (21) உள்பட 15 பேர் என்பது தெரிய வந்தது.

பின்னர் வேப்பந்தட்டை வனத்துறையினர் 15 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டு பண்டிகை முடிந்த பிறகு ஊர் ஊராகச் சென்று முயல் வேட்டையாடி கிடைக்கும் முயல்களை தங்களது கிராமத்திற்கு கொண்டு சென்று சாமிக்கு வைத்து படைத்து, விழா கொண்டாடுவது வழக்கம். அவ்வாறு விழா கொண்டாட வந்தவர்கள் வனத்துறையினரிடம் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Similar News