செய்திகள்
மாமல்லபுரம் கடலில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்கடலில் குளித்து மகிழ்ந்தனர்

Published On 2021-08-02 15:31 IST   |   Update On 2021-08-02 15:31:00 IST
மாமல்லபுரத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் போலீசாரின் எச்சரிக்கையும் மீறி கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொரோனா ஊரடங்குக்கு பிறகு பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் தற்போது மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர். நேற்று திரண்ட சுற்றுலா பயணிகள் பலர் சமூக இடைவெளி இல்லாமல போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளித்து மிகிழ்ந்தனர்.

கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் உள்ளதாலும், கடல் சீற்றம் அதிகம் உள்ள்தாலும் கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என்று ரோந்து பணியில் இருந்த போலீசார் கெஞ்சி கேட்டுகொண்டிருந்தனர்.

ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை யாரும் காதில் வாங்காமல் அலட்சியமாக கடலில் குளித்து கொண்டிருந்ததை காண முடிந்தது. பலர் தங்கள் குழந்தைகளை ஆபத்தை உணராமல் கடல் அலையில் விளையாட அனுமதித்துவிட்டு கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக சுற்றுலா பயணிகளால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. தின்பண்டம் விற்கும் கடைகளில் வியாபாரமும் களைகட்டியது. நேற்று சுற்றுலா வாகனங்கள் அதிகம் திரண்டதால் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

மேற்குராஜ வீதி, கோவளம் சாலையில் சுற்றுலா வாகனங்கள் அதிக தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி ஆகியோருடன் போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதற்கிடையில் கொரோனா 3-வது அலை தொற்று கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதையொட்டி நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பேரூராட்சி சார்பில் நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மாமல்லபுரம் நகரில் உள்ள முக்கிய புராதன சின்னங்களில் நேற்று தொடங்கியது.

கடற்கரை கோவில் அருகில் சுற்றுலா வந்த பயணிகளிடம் முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து சமூக இடைவெளியுடன் சுற்றி பார்க்க வேண்டும். என்பது போன்ற தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரத்தை மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் சுற்றுலா வந்த பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இங்குள்ள அனைத்து புராதன சின்னங்களை சுற்றி பார்க்க செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், முக கவசம் அணியாத பயணிகளுக்கு சம்பவ இடத்திலேயே ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தி அனுப்பினர்.

Similar News