செய்திகள்
ரவுடிகள் வெட்டியதால் காயமடைந்த காய்கறி வியாபாரி

வேலூரில் நேதாஜி மார்க்கெட்டில் மாமூல் கேட்டு வியாபாரிக்கு கத்தி வெட்டு - ரவுடி கும்பல் அட்டகாசம்

Published On 2021-07-29 15:58 IST   |   Update On 2021-07-29 15:58:00 IST
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தினமும் ரவுடி கும்பல் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் செய்து வருகின்றனர்.

வேலூர்;

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பாலு (வயது 40). என்பவர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். இவர் இன்று அதிகாலை மார்க்கெட்டுக்கு சென்றார்.

ரவுடிக் கும்பலை சேர்ந்த 3 பேர் அவரை மடக்கி மாமுல் கேட்டனர். அவர் தருவதற்கு மறுத்ததால் ரவுடி கும்பல் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் பாலுவின் தலையில் வெட்டினர்.

இதில் பாலு பலத்த காயமடைந்தார். தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் பாலுவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேதாஜி மார்க்கெட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தினமும் ரவுடி கும்பல் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் செய்து வருகின்றனர். பணம் தராத வியாபாரிகளை தாக்கும் சம்பவங்கள் தினந்தோறும் நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில்;

நேதாஜி மார்க்கெட் அருகில் டீக்கடை ஒன்று உள்ளது. அதன் அருகே உள்ள ஒரு சந்தில் அதிகாலையில் 4 பேர் கும்பல் வருகின்றனர். அவர்கள் அந்த வழியாக செல்லும் வியாபாரிகளை மிரட்டி செல்போன் பறித்து செல்கின்றனர். மேலும் சிலரிடம் பணத்தையும் பறிக்கின்றனர். ரவுடி கும்பல் வழிப்பறி செய்யும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.ரவுடி கும்பல் அட்டகாசத்தால் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் அத்து மீறி செயல்படும் ரவுடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News