செய்திகள்
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை

கோத்தகிரியில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியைகள்

Published On 2021-07-23 11:14 GMT   |   Update On 2021-07-23 11:14 GMT
கோத்தகிரி கட்டபெட்டு பாக்கியா நகரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோத்தகிரி, கட்டபெட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கோத்தகிரி:

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்திலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் போதிய தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.

கோத்தகிரி கட்டபெட்டு பாக்கியா நகரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோத்தகிரி, கட்டபெட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கல்வி தொலைக் காட்சி வாயிலாகவும், ஆன்லைன் மூலமாகவும் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வந்தனர். ஆன்லைன் மூலம் சொல்லி கொடுப்பதை விட அவர்களுக்கு நேரில் சென்று பாடம் நடத்த இந்த பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும், கடந்த சில நாட்களாக மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தா கூறியதாவது:-

பாக்கியா நகர் பள்ளியில் எல்.கே.ஜி.முதல் 8-ம் வகுப்பு வரை 100 மாணவர்கள் படிக்கின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே தோட்ட தொழிலாளர்கள் தான். இவர்களின் பிள்ளைகளுக்கு படிப்பை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் நடத்தி வருகிறோம்.

மேலும் நாங்களே அவர்களின் வீடுகளுக்கு சென்றும் பாடம் கற்பித்து வருகிறோம். வீட்டு பாடங்கள் கொடுத்து, மாணவர்கள் எழுதுவதை உறுதி படுத்துகிறோம். மாணவர்கள் பாடங்களை மறக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News