செய்திகள்
கோப்புபடம்

ஓடும் பஸ்சில் டிரைவர் சீட்டில் பதுங்கி பயணம் செய்த பாம்பு - பயணிகள் அலறல்

Published On 2021-07-11 05:13 GMT   |   Update On 2021-07-11 05:13 GMT
அவலூர்பேட்டையில் பஸ் நின்றபோது பாம்பு, டிரைவர் சீட்டில் பதுங்கி இருந்துள்ளது. திருவண்ணாமலை பஸ்நிலையம் வந்த பின்னரே அந்த பாம்பு வெளியில் வந்தது. நல்லவேளை பாம்பால் டிரைவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
திருவண்ணாமலை:

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் இருந்து நேற்று காலை ஒரு டவுன் பஸ் திருவண்ணாமலைக்கு வந்தது. திருவண்ணாமலை பஸ் நிலையம் வந்ததும் டிரைவர் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த ஒரு பாம்பு திடீரென வெளியே வந்தது.

சுமார் 3 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு பயணிகளை கண்டதும் வேகமாக ஊர்ந்து செல்ல முயன்றது. பஸ்சில் பாம்பை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். சில பயணிகள் கத்திக்கொண்டே அடித்துக் கொல்ல முயன்றனர்.

ஆனால் அந்த பாம்பு பஸ்சின் மேற்கூரைக்கு சென்று விட்டது. அங்கு அந்த பாம்பு தலையை தூக்கிக் கொண்டு நின்றது.

தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் சிறிது நேரம் அந்த பாம்பு போக்கு காட்டியது. பின்னர் அந்த பாம்பை அவர்கள் லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து பாம்பை அவர்கள் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

அவலூர்பேட்டையில் பஸ் நின்றபோது பாம்பு, டிரைவர் சீட்டில் பதுங்கி இருந்துள்ளது. திருவண்ணாமலை பஸ்நிலையம் வந்த பின்னரே அந்த பாம்பு வெளியில் வந்தது. நல்லவேளை பாம்பால் டிரைவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்த பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது என்று பஸ்சில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News