செய்திகள்
கலங்கரை விளக்கம்

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்

Published On 2021-07-09 22:32 IST   |   Update On 2021-07-09 22:32:00 IST
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறை மீது இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது. 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம். இது 1887-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் மாமல்லபுரம் கடல் பகுதியை அறிந்து விலகி செல்லவும், மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் தொடக்கத்தில் மண்எண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது. கடந்த 1940-ம் ஆண்டு் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டு, நவீன தொழில் நுட்பத்தில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் கடற்கரை பகுதிகளில் பல இடங்களில் அமைந்துள்ள கலங்ரை விளக்கங்கள் அனைத்தும் தரைதளத்தில் அமைக்கப்பட்டதாகும். ஆனால் தமிழகத்தில் மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்ட ஒரே கலங்கரை விளக்கம் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் என்ற தனிச்சிறப்பை பெற்றதாகும். இது மலைக்குன்றில் இருந்து 130 அடி உயரத்தில் அமைக்கப்பட்டதாக உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி மாமல்லபுரம் அழகினையும், வரலாற்று புராதன சிற்பங்களையும் கண்டுகளிக்க உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.10-ம் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.25-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இங்கு இலவச அனுமதி உண்டு.

அவர்களுக்கு என தனியாக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வந்த காரணத்தால் இந்த கலங்கரை விளக்கம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு சுற்றுலாவுக்கு விதித்த தடையை நீக்கி மாமல்லபுரத்துக்கு பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் 3 மாதமாக மூடப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் தற்போது கலங்கரை விளக்கத்தின் உச்சியில் உள்ள குமிழ் பகுதியில் பாதுகாப்பு கம்பி வேலிகள், உச்சியில் இரும்பினால் ஆன குமிழ் பகுதிகள் உப்பு காற்றால் பாதிக்கப்பட்டு துருபிடித்து உள்ள நிலையில் அதனை வண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உச்சி பகுதியில் வண்ணம் தீட்டி அழகு படுத்தும் பணிகள் முடிந்தபின் உள் பகுதியிலும் வண்ணம் தீட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்த பணிகள் முடிந்தபிறகு அடுத்த வாரம் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

Similar News