செய்திகள்
இளையான்குடியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய காட்சி.

காரைக்குடியில் ஒரே நாளில் 1,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-25 11:20 GMT   |   Update On 2021-06-25 11:20 GMT
காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
காரைக்குடி:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள வேண்டும் என்றால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டினார்கள். கொரோனா 2-வது அலை தீவிரத்தால் தடுப்பூசி போட்டு கொள்வது தான் உயிருக்கு பாதுகாப்பு என அறிந்ததும் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.

காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. தடுப்பூசி போட்டு கொள்ள ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஓட்டு போடுவதற்காக காத்து நின்ற போல அணிவகுத்து நின்றனர்.

தடுப்பூசி போட்டு கொள்ள வந்த அனைவரும் முககவசம் அணிந்திருந்த போதிலும் சமூக இடைவெளியை பின்பற்றாதது வேதனைக்குரியது. இருப்பினும் தங்கள் ஆதார் கார்டை காண்பித்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் 1,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,

தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. எனினும் சமூக இடைவெளியை பின்பற்றாததால் மேலும் கொரோனா ெதாற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற சிறப்பு முகாம்கள் நடத்தும் போது தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி போட வரும் ஆண்கள், பெண்கள் சமூக இடைவெளியுடன் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் பெருந்தொற்றில் இருந்து மீள முடியும் என்றனர்.

திருப்புவனம் வர்த்தகர்கள் சங்கமும், திருப்புவனம் வட்டார உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடத்திய சிறப்பு முகாமில் 387 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையில் செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். முகாமில் திருப்புவனம் வர்த்தகர்கள் சங்க தலைவர் சாதிக் பாட்ஷா, செயலாளர் முனியாண்டி, பொருளாளர் சிராஜுதீன், திருப்புவனம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 102 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் ஒன்றிய சேர்மன் முனியாண்டி, வட்டார வளர்ச்சி ஆணையாளர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News