தமிழ்நாடு செய்திகள்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் திமுக அரசின் பித்தலாட்ட நாடகம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Published On 2026-01-10 18:56 IST   |   Update On 2026-01-10 18:56:00 IST
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.
  • ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் அவ்வப்போது உயர்த்தி மறுநிர்ணயம் செய்யப்படும் பரிந்துரை இல்லை.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.

`ஒன்றிய அரசு, குன்றிய அரசு' என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.

விடியா திமுக ஸ்டாலின் அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக, அடுத்தவர்களின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி பெருமைகொள்வதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

அதைப் போலவே, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு ஊழியர்களின் பங்களிப்புடன் கூடிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என புதிய பெயருடன் ஸ்டிக்கர் ஒட்டி அரங்கேற்றியுள்ளது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்.

இச்செயல் `புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஏதுமில்லை. ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம், விலைவாசிப் புள்ளி உயர்வின் அடிப்படையில் அகவிலைப் படியும் கிடைக்கும்; ஊதியக் குழு பரிந்துரையின்படி ஓய்வூதிய அடிப்படைத் தொகையும் மாற்றியமைக்கப்படும்.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடமிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (Unified Pension Scheme) அப்பட்டமான நகல் ஆகும்.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் அவ்வப்போது உயர்த்தி மறுநிர்ணயம் செய்யப்படும் என்ற பரிந்துரையும், ஸ்டாலின் இப்போது அறிவித்துள்ள, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இல்லை.

எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது.

உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

Tags:    

Similar News