செய்திகள்
கோப்புப்படம்

மாணவர்களின் செல்போனில் முகம் சுளிக்கும் வீடியோக்கள் வராமல் தடுப்பது எப்படி?- கோவை போலீசார் விளக்கம்

Published On 2021-06-25 09:20 GMT   |   Update On 2021-06-25 09:20 GMT
மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்தும்போது விரும்பத்தகாத விளம்பரங்கள், முகம் சுளிக்கும் வீடியோக்கள் வர வாய்ப்புள்ளது.
கோவை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்தும்போது விரும்பத்தகாத விளம்பரங்கள், முகம் சுளிக்கும் வீடியோக்கள் வர வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற விரும்பத்தகாத விளம்பரங்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் கூறியதாவது:-

பெற்றோர் தங்களது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் போது கேம் ஸ்கேனர், டிஸ்கா, எம். எக்ஸ் வீடியோ பிளேயர், இ. எஸ்.பைல் மேனேஜர், யூடியூப், கூகுள் குரோம் ஆகிய செயலிகளை உபயோகப்படுத்தும் தேவை வரலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது இடையிடையே விரும்பத்தகாத விளம்பரங்கள் வரும்.


இதனைத் தடுக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட் செல்போனின் பிளே ஸ்டோரில் சென்று செட்டிங்சில் பேரன்ட் கண்ட்ரோல் என்ற பட்டனை தொட்டு ஆன் செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே உள்ள ஏப் அண்ட் கேம்ஸ் என்ற திரையை தொட்டு தங்களது குழந்தைகளின் வயதை கிளிக் செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து பிலிம்ஸ் என்ற திரையை தொட்டு யூ என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் யூடியூப் செட்டிங் சென்று ஜெனரல் பக்கத்தில் உள்ள ரெஸ்ட்ரிக்சன் மோட் திரையை தொட்டு ஆன் செய்ய வேண்டும்.

இந்த முறைகளை செய்வதன் மூலம் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது தேவையற்ற விளம்பரம், முகம் சுளிக்கும் வீடியோக்கள் வராமல் தடுக்க முடியும். எனவே ஒவ்வொரு பெற்றோரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் தங்களது குழந்தைகளை கண்காணித்து இதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு போலீசார் ஆன்லைன் மூலமாக பாடம் படிக்கும் மாணவ - மாணவிகளின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
Tags:    

Similar News