செய்திகள்
கோப்புப்படம்

பின்னலாடை துறையினர் வசதிக்காக திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்க வேண்டுகோள்

Published On 2021-06-25 06:52 GMT   |   Update On 2021-06-25 06:52 GMT
வரி சார்ந்த பிரச்சினைகள் எழும்போது உயர் அதிகாரிகளிடம் முறையிடுவதற்கு திருப்பூர் பின்னலாடை துறையினர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
திருப்பூர்:

கடந்த 2018-19 நிதியாண்டில் வணிக வரி கோட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. கோவை கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பூர் வணிக வரி மாவட்டம்  ஈரோடு கோட்டத்துடன் சேர்க்கப்பட்டது. திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளான தாராபுரமும், காங்கயமும் கரூர் வணிக வரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.அவிநாசி சரகம் கோவையுடனும், உடுமலை சரகம் பொள்ளாச்சி வணிக வரி மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன.

இதனால் வரி சார்ந்த பிரச்சினைகள் எழும்போது உயர் அதிகாரிகளிடம் முறையிடுவதற்கு திருப்பூர் பின்னலாடை துறையினர் மிகவும் சிரமப்படுகின்றனர்.கோவை, ஈரோடு, கரூர் என 3 மாவட்டங்களுக்கு அலையும் நிலை தொடர்கிறது.எனவே வருவாய் மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்க வேண்டும் என திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், மூர்த்தி, கயல்விழி, செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோருக்கு  கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் லட்சம் கோடி வர்த்தகத்தை எட்டுவதற்கு லட்சியம் வகுத்து  அதை நோக்கி பயணித்து வருகின்றனர். ஆனால் வணிக வரி கோட்டங்கள் மறுசீரமைப்பின் போது திருப்பூர் வணிக வரி மாவட்டம் சிதறடிக்கப்பட்டுவிட்டது.

திருப்பூர் பகுதி பின்னலாடை துறையினர் வணிக வரி சார்ந்த தேவைகளுக்கு இணை கமிஷனரை சந்திக்க ஈரோடு செல்லவேண்டியுள்ளது. இதனால் காலதாமதமும் தொழில் துறையினர் வீண் அலைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.சரக்கு மற்றும் சேவை வரி கோட்ட அலுவலகம் திருப்பூரில் அமைவது இன்றியமையாததாகிறது. திருப்பூரில் மட்டும் வணிக வரித்துறையில் பதிவு செய்த 47 ஆயிரம் வர்த்தகர் உள்ளனர். 

வருவாய் மாவட்ட பகுதிகளான காங்கயத்தில் 3,700, தாராபுரத்தில் 1,700, உடுமலையில் 3,300, அவிநாசியில் 3,700 என 59,400 வர்த்தகர் உள்ளனர். எனவே  வருவாய் மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். இணை கமிஷனர் நியமிக்கும் போது  வரி சார்ந்த பிரச்சினைகளுக்கு தொழில்துறையினர் எளிதில் தீர்வு காண முடியும். வர்த்தக இலக்குகளை அடைவதும் சுலபமாகும். இவ்வாறு  கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News