செய்திகள்
அபராதம்

அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா விதிமீறல் மூலம் ரூ.42 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2021-06-23 09:48 GMT   |   Update On 2021-06-23 09:48 GMT
அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலரின் அதிரடி நடவடிக்கையில், 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 36 வழக்குகள் பதிவு செய்து ரூ.42 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் கொரோனா விதி முறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

இதன் அடிப்படையில் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தேர் வீதி, சிங்கார வீதி, அண்ணாசாலை, ராஜவீதி, பர்கூர் சாலை, பஸ் நிலையம், பவானி சாலை ஆகிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், கடைகளுக்கு முன் கட்டங்கள் வரையாமலும், கொரோனா விதி முறையை பின்பற்றாமல் இருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தள்ளுவண்டி கடைகளிலும் கொரோனா விதிமுறையை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும், கொரோனா விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்து விற்பனை செய்த கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களில் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலரின் அதிரடி நடவடிக்கையில், 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 36 வழக்குகள் பதிவு செய்து ரூ.42 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News