செய்திகள்
கோப்புபடம்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி பலி

Published On 2021-06-16 15:05 GMT   |   Update On 2021-06-16 15:05 GMT
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை சாரம் பிருந்தாவனம் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது56). இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வர்த்தகர் அணி மாநில செயலாளராக இருந்து வந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் கோரிமேட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது தடுமாறி ராஜேந்திரன் கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.

மடுகரை காமராஜர்நகரை சேர்ந்தவர் கோபிநாத் (33). இவர் 4 சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது மனைவி சசிகலாவுடன் மோட்டார் சைக்கிளில் பிச்சவீரன்பேட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக கோபிநாத் ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு கோபிநாத் மற்றும் அவரது மனைவி சசிகலா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கணவன்-மனைவி இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த 2 விபத்துக்கள் குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News