செய்திகள்
போராட்டம்

வந்தவாசி அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் மறியல்

Published On 2021-06-15 06:31 GMT   |   Update On 2021-06-15 06:31 GMT
வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரி ஊராட்சியில் வந்தவாசி - விளாங்காடு சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுபானக் கடையை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் மதுபானக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருவதால் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றனர். மேலும் கைகளில் பதாகைகளை பிடித்துக் கொண்டு மதுபானக் கடைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதுகுறித்து தகலவறிந்த தாசில்தார் திருநாவுக்கரசு, டி.எஸ்.பி. தங்கராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்கள் டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News