செய்திகள்
புதுச்சேரி

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிப்பு

Published On 2021-06-15 00:29 GMT   |   Update On 2021-06-15 01:46 GMT
புதுச்சேரியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கோரத் தாண்டவமாடி வருகிறது.

புதுவையிலும் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த மே மாதம் முதல் அடுத்தடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.

காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. அரசின் கடுமையான நடவடிக்கைகளால் புதுவையில் 2 ஆயிரமாக இருந்த தினசரி தொற்று பாதிப்பு 500-க்கு கீழ் சரிந்தது. உயிரிழப்பும் குறைந்தது.

இதையடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் கடந்த 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஒருவார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் அனைத்து விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. பெரிய மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டது. மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.



இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
 
இதையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் வரும் 21-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் காய்கறி மற்றும் பழ கடைகள் அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கலாம்.

அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கம்போல் பணிகளை மேற்கொள்ளலாம். மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம்.

சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பொதுப்போக்குவரத்து (பஸ், கார், ஆட்டோ) மாலை 5 மணி வரை இயங்கலாம்.

கடற்கரை சாலையில் நடை பயிற்சி செல்ல காலை 5 மணி முதல் 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், மது பார்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளித்து புதுச்சேரி அரசு செயலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News