செய்திகள்
மயிலாடுதுறை அருகே மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது
மயிலாடுதுறை அருகே மின் மோட்டார் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 5 மணியளவில் திருவிழந்தூர் பகுதியில் இருந்து வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் வந்த 2 பேர் உட்பட 3 பேரும் முன்னுக்குபின் பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து மேலும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் தெற்கு வீதியில் உள்ள மகாலிங்கம் மகன் செந்தில்குமார் என்பவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மின் மோட்டாரை திருடி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ மற்றும் நீர் இறைக்கும் மோட்டார், குழாய்கள், வயர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செந்தில்குமார் (வயது 36) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (30), அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் சிவச்சந்திரன் (23), ரங்கநாதன் மகன் தினேஷ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சித்தர்காடு தண்டபாணி செட்டி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் வினோத்குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.