செய்திகள்
கலெக்டர் சந்தீப் நந்தூரி

3வது அலை வருவதற்குள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- கலெக்டர்

Published On 2021-06-05 17:19 IST   |   Update On 2021-06-05 17:19:00 IST
நான் உள்பட என்னுடன் உள்ள அனைத்து அதிகாரிகளும் தடுப்பூசி போட்டு உள்ளார்கள். அதனால் தான் நான் தினமும் வெளியில் தைரியமாக வருகிறேன்.
கலசபாக்கம்:

கலசபாக்கத்தில் கொரோனா பரிசோதனை முகாம் மற்றும் பழங்கோவில், மோட்டூர் ஆகிய ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி, சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

மருத்துவ பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்யும்போது மிகவும் பாதுகாப்புடனும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். அடிக்கடி சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் 3-ம் அலை வருவதற்கு முன்பு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இதற்காக ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அளவுக்கு அவதிப்படுகிறார்கள் என்பதை மருத்துவமனையில் சென்று பார்த்தால் தெரியும். பெரும்பாலானோர் தனக்கு வயதாகிவிட்டது, உடல்நிலை சரியில்லை, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளது என கூறி தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர்.

தடுப்பூசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. நான் உள்பட என்னுடன் உள்ள அனைத்து அதிகாரிகளும் தடுப்பூசி போட்டு உள்ளார்கள். அதனால் தான் நான் தினமும் வெளியில் தைரியமாக வருகிறேன். இதனால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகர், தாசில்தார் அமுல், வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராம், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வந்தவாசியை அடுத்த கொடநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதில் வழூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆனந்தன், மருந்தாளுனர் மணிகண்டன், அன்பு மற்றும் செவிலியர் மலர்க்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News