செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோடு மாவட்டத்தில் மூதாட்டி உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-06-04 15:31 IST   |   Update On 2021-06-04 15:31:00 IST
ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 16 ஆயிரத்து 87 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, கோவை, சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 1,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 61 ஆயிரத்து 408 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் கடந்த மாதம் 19-ந்தேதியும், 65 வயது ஆண் 25-ந்தேதியும், 85 வயது முதியவர், 55 வயது ஆண் ஆகியோர் 30-ந்தேதியும், 67 வயது முதியவர் 31-ந்தேதியும் இறந்தனர்.

மேலும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்து 70 வயது மூதாட்டி கடந்த 1-ந் தேதியும், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினமும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 389 ஆக உயர்ந்தது.

அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,565 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 44 ஆயிரத்து 932 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.

இதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 16 ஆயிரத்து 87 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Similar News