செய்திகள்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பை குறைக்க கூடுதல் கவனம் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2021-06-04 03:05 IST   |   Update On 2021-06-04 03:05:00 IST
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது நமக்கு நிம்மதியைக் கொடுக்கிறது என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவ கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தார்.

அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது நமக்கு நிம்மதியைக் கொடுத்தாலும், தொற்று பாதிப்பு குறைந்து வரும் நேரத்தில் இறப்பு சற்று மனக்கவலை அளிக்கிறது. இதனால் கொரோனா இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு அரசு அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.



தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு-பூஞ்சை நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால், பாதிக்கப்படுவோருக்கு அனைத்துவித மருந்துகளையும் தயார் நிலையில் வைத்திருந்து இறப்புகளைத் தடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பம். அ.தி.மு.க. ஆட்சியில் இம்மையத்தை ஆய்வு செய்து, செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். எனவே, இம்மையத்தை திறப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Similar News