செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு தடையை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு

Published On 2021-05-28 17:21 IST   |   Update On 2021-05-28 17:21:00 IST
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார்தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இ-பதிவு பெற்றிருந்தாலும் கடும் சோதனைக்கு பிறகே தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். இருந்தாலும் முழு ஊரடங்கு பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிந்தனர். ஊரடங்கின் 4-வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 350 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 1,100 இருசக்கர வாகனங்கள், 45 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் தொடர் இறுக்குபிடியால் வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்று 5-வது நாளாக தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Similar News