செய்திகள்
பெரம்பலூரில் கொரோனா தடுப்பூசி போட காத்திருந்தவர்களை படத்தில் காணலாம்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் - கலெக்டர்கள் ஆய்வு

Published On 2021-05-27 18:59 IST   |   Update On 2021-05-27 18:59:00 IST
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர்கள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர்:

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, முன்கள பணியாளர்கள், 45 வயதை கடந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது 18 வயது முதல் 44 வயதுடையோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி அந்தந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது.

ஆரம்ப கால கட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாத பொதுமக்கள் தற்போது அதன் அவசிய அவசரம் கருதி தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு பெரம்பலூர் அஸ்வின் ஓட்டல் கூட்ட அரங்கிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் லப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு கொளக்காநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 28 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஒரு நகர்ப்புற சுகாதார நிலையத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டார தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ள 3,444 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஆலம்பாடி, நாட்டார்மங்கலம் கிராமங்களில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல அரியலூர் கலெக்டர் ரத்னாவும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 18 முதல் 44 வயதுடைய 4,153 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவ துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல அரியலூர் மாவட்டத்தில் 3,514 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், லப்பைகுடிகாடு பேரூராட்சி அலுவலகம் ஆகிய 3 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. குன்னத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபா செல்லப்பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

Similar News