குழந்தை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் பலியான தாய்
பெரம்பலூர்:
கொரோனாவின் 2-வது அலை இளம் வயதினரை அதிகம் தாக்கி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியின்மையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல் கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டு பலர் மீண்டுள்ளனர். இதில் பெரம்பலூரில் குழந்தை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் இளம்பெண் பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 26). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணமானது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரஞ்சிதாவை அவரது உறவினர்கள் கடந்த 12-ந்தேதி தலை பிரசவத்திற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து 14-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் ரஞ்சிதாவுக்கு திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இருந்தபோதிலும் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தலை பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12- வது நாளில் கொரோனா தொற்றால் தாய் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.