செய்திகள்
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு - கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வலியுறுத்தல்

Published On 2021-05-24 20:12 IST   |   Update On 2021-05-24 20:12:00 IST
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வலியுறுத்தினர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலராக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அவர் வந்தார்.

பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு எத்தனை நபர்கள் வருகிறார்கள் என்பதை கேட்டறிந்தார். கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அத்துடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை உடனுக்குடன் பரிசோதித்து வார்டுகளில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 3-ம் தளத்தில் சிகிச்சை வழங்கும் பகுதியிலிருந்து தரைத்தளத்தில் உள்ள மருத்துவர்களிடம் தகவல் பரிமாறிக்கொள்ள ஏதுவாக தொலைபேசி மற்றும் ஒலிபெருக்கி வசதியை உடனடியாக அமைத்திட மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.

அவருடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மருத்துவமனை டீன் சங்குமணி, மருத்துவ அலுவலர் டாக்டர் மீனாள் மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர்.பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.

Similar News