செய்திகள்
பிபிஇ கிட்

கொரோனாவுக்கு சுகாதார ஊழியர்கள் 6 பேர் பலி- தரமான பாதுகாப்பு உடை வழங்க நர்சு கோரிக்கை

Published On 2021-05-24 11:30 IST   |   Update On 2021-05-24 11:30:00 IST
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஊழியர்கள் பலியாகி வருவது சுகாதாரத்துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:

உலகம் முழுவதும் கொரோனா தொற்று 2019 டிசம்பர் மாதம் முதல் பரவ தொடங்கியது.

இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு அறிவிப்பால் அத்தியாவசிய துறைகள் தவிர பிற துறைகள் இயங்காமல் உள்ளது.

அதேநேரத்தில் சுகாதாரத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை, நோயாளிகளின் அதிக வருகை, கூடுதல் பணிச்சுமையுடன் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முதல்கட்ட கொரோனா அலை கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக குறைந்தது. இதனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிச்சுமை குறைந்து சில மாதங்கள் நிம்மதியடைந்தனர்.



இந்நிலையில் கடந்த பிப்ரவரி இறுதியில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தொடங்கி யது. முதல் தாக்குதலை விட 2-வது அலையின் தாக்கம் மிக வீரியமாக உள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சென்றது. இதனால் தனியார் மருத்துவ மனைகளையும் அரசு ஏற்று செயல்படுகிறது.

தற்காலிகமாக டாக்டர்கள், செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிச்சுமை குறையவில்லை.

இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியர்கள் 6 பேர் இம்மாதத்திலேயே இறந்துள்ளனர்.

கடந்த 11-ந் தேதி அரசு மகப்பேறு மருத்துவமனை நர்சிங் ஆர்டலி அனுசுயா, 16-ந் தேதி அரசு பொது மருத்துவமனை வார்டு அட்டண்டர் மாயகிருஷ்ணன், 19-ந் தேதி நர்சிங் ஆர்டலி ரங்கநாதன், 20-ந் தேதி ஒப்பந்த டாக்டர் மோகன்குமார், 21-ந் தேதி சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், 22-ந் தேதி செவிலியர் அதிகாரி நிரஞ்சனா ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இத்தகவலை சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஊழியர்கள் பலியாகி வருவது சுகாதாரத்துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் தங்களை காப்பாற்ற உயிர் காக்கும் உபகரணங்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஆச்சிஜன் படுக்கை, வெண்டிலேட்டர் வசதி, மருந்து ஆகியவற்றை தட்டுப்பாடின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

மேலும் சுகாதாரத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி வருகிறது.

புதுவை அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த நர்சு ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு எந்த நஷ்டஈடும் தேவையில்லை. தரமான பி.பி.இ.கிட் (கவச உடை) வாங்கி தந்தால் போதும். தற்போது வழங்கும் உடையை ஒரு மணி நேரம் கூட அணிய முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனை கழற்றிப்போடும் நிலை ஏற்படுகிறது.

சுகாதாரத்துறை செயலர், கவர்னருக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை. எவ்வளவுதான் மன்றாடுவது? ஆஸ்பத்திரி வி‌ஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என நினைக்கிறோம். சாதாரண வி‌ஷயமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்.

ஆனால் தற்போது மக்களைப்பற்றி கவலையின்றி போராடுகின்றனர் என குற்றம் சொல்வர். தரமான பி.பி.இ.கிட் கேட்டு கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகிறது. நன்கொடையாக கதிர்காமம் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம், அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.56 ஆயிரத்தில் பி.பி.இ.கிட் வாங்கி கொடுத்தோம்.

எவ்வளவு நாள் நன்கொடை வாங்கி, பிச்சையெடுத்து வாங்கித்தர முடியும். எங்களுக்கு உயிர் பாதுகாப்போடு வாழ பி.பி.இ.கிட் அளித்தால் போதும். நஷ்டஈடு, ஊக்கத்தொகை, போனஸ் எதுவும் வேண்டாம். இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம் என தெரியவில்லை.

சக ஊழியர்கள் இறப்பதால் மற்றவர்கள் மன அழுத்தம், மன உளைச்சல் அடைகின்றனர். அரசை வலியுறுத்தி தரமான உபகரணங்கள வாங்கித்தாருங்கள் அது போதும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பல மாதமாக ஓய்வின்றி பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News