செய்திகள்
செய்யாறு அரசு மருத்துவமனையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுரை

Published On 2021-05-23 19:20 IST   |   Update On 2021-05-23 19:20:00 IST
கொரோனா தொற்று பரவலை தடுத்திட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நடைபெற்று வரும் காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள், செய்யாறு தலைமை அரசு மருத்துவமனை, கொரோனா பராமரிப்பு மையம் ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, உதவி கலெக்டர் என்.விஜயராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜிதா, செய்யாறு நகராட்சி ஆணையாளர் எம்.எஸ்.பிர்த்தி ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி எல்லப்பன் நகர், பைங்கிணர், அண்ணா நகரில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக பரிசோதனை மேற்கொண்டதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 400 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தினை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, உணவு, ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். செய்யாறு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 950 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் சராசரியாக தினமும் 600 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்யாறு சுகாதார மாவட்டத்தில் தினமும் 1500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் 2000 படுக்கை வசதிகளுடன் பல்வேறு பகுதிகளில் கொரோனா பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக 1000 படுக்கை வசதிகளுடன் கொரோனா பராமரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. செய்யாறு அரசு மருத்துவமனையில் விரைவில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி அலகு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செய்யாறு தலைமை அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி கொரோனா பராமரிப்பு மையத்தில் விரைவில் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இம்மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 100 படுக்கைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 232 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காவல் துறை மூலம் மாவட்ட எல்லையில் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Similar News