செய்திகள்
சொரகொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ஆனந்தல், சொரகொளத்தூர், நார்த்தாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை சபாநாயகர் ஆய்வு

Published On 2021-05-23 13:45 GMT   |   Update On 2021-05-23 13:45 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 1,200 படுக்கைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 1,200 படுக்கைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனந்தல், சொரகொளத்தூர், நார்த்தாம்பூண்டி ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தலா 500 வீதம் மொத்தம் 1,500 முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கினார்.

மேலும் அவர் சொரகொளத்தூர் மற்றும் நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாயுடுமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு மற்றும் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

தொடர்ந்து நார்த்தாம்பூண்டி மற்றும் தேவனாம்பட்டு கிராமங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பூதமங்கலம் ஆதிகேவச பெருமாள் கோவில் திருத்தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் புதிய கான்கீரிட் பந்தல் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கலெக்டர் சந்தீப்நந்தூரி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ., சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அஜிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் அரசு அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News