செய்திகள்
கோப்புபடம்

வாணாபுரம் அருகே போதையில் தகராறு செய்த மீன் வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை - சிறுவன் கைது

Published On 2021-05-23 19:08 IST   |   Update On 2021-05-23 19:08:00 IST
வாணாபுரம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மீன் வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம்:

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தச்சம்பட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் கிறிஸ்துராஜ் (வயது 40). இவருக்கு ரேகா (35) என்ற மனைவியும், கிறிஸ்டி (5), கிறிஸ்டோபர் (3) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். கிறிஸ்துராஜ் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேகா அவரது சொந்த ஊரான சென்னைக்கு குழந்தைகளுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிறிஸ்துராஜ் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை கிறிஸ்துராஜ் அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் அழகுராணி, தச்சம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் கிறிஸ்துராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிறிஸ்துராஜ் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈருடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது உறவினர் ஊரான தச்சம்பட்டு புதூர் பகுதிக்கு வந்திருந்தார். இந்த சிறுவன் நேற்று முன்தினம் கிறிஸ்துராஜுடன் இருந்துள்ளான்.

அப்போது கிறிஸ்துராஜ் மது அருந்திவிட்டு சிறுவனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த சிறுவன் காய்கறி வெட்டும் கத்தியால், கிறிஸ்துராஜை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு, கிறிஸ்துராஜ் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் 2 மோதிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அந்தப்பகுதியில் மறைந்திருந்த சிறுவனை கைது செய்து பணம் மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

17 வயது சிறுவன், மீன் வியாபாரியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News