தண்டராம்பட்டு அருகே மீன் வியாபாரி கழுத்தை அறுத்து கொடூரக் கொலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தச்சம்பட்டு புதூரை சேர்ந்த குழந்தைசாமி என்பவரது மகன் திருத்ராஜ் (வயது40) மீன் வியாபாரி. இவர் கோழிப்பண்ணையும் வைத்திருந்தார்.
திருத்ராஜ் அங்குள்ள ஒருமாடி வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை அவரிடம் மீன் வாங்க வந்த சிலர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது திருத்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நள்ளிரவில் வீட்டு மாடியில் இருந்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருத்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ?என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு திருத்ராஜ் வீட்டிற்கு யாராவது சென்றார்களா? மேலும் முன்விரோதிகள் யாரும் உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன் வியாபாரி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தச்சம்பட்டு புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.