செய்திகள்
வாழைத்தார்

கூடலூரில் வாழைத்தார் கொள்முதல் விலை சரிவு- விவசாயிகள் கவலை

Published On 2021-05-20 16:20 IST   |   Update On 2021-05-20 16:20:00 IST
முழு ஊரடங்கால் கூடலூரில் வாழைத்தார்களின் கொள்முதல் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, குறு மிளகு, இஞ்சி, ஏலக்காய் மற்றும் பல வகை காய்கறிகளும் வருகிறது. இது தவிர ஆண்டு முழுவதும் நேந்திர வாழைகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, மும்பை உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் வாழை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்து வருகிறது. இதுதவிர சிப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கவும் வாழை தார்கள் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தேவையும் அடியோடு குறைந்து உள்ளது.

கூடலூர் பகுதியில் விளையும் வாழைத்தார்களின் கொள்முதல் விலையும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. மேலும் கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு தொடர்வதால் வாழைத்தார்கள் போதிய விற்பனை ஆவதில்லை என கூறப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு நிலை தொடர்வதால் விளைந்த வாழைத்தார்கள் மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய்கள் ரூ.42 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கேரளா உள்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாழைத்தார் தேவையும் குறைந்துவிட்டது. இதனால் மொத்த வியாபாரிகள் வாழைத்தார்களை குறைவாக விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். தற்போது கிலோ ரூ.23 மட்டுமே விலை கிடைக்கிறது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News