செய்திகள்
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய 6-ம் வகுப்பு மாணவன்

ரிமோட் கார் வாங்குவதற்காக சேமித்த பணத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய 6-ம் வகுப்பு மாணவன்

Published On 2021-05-19 19:18 IST   |   Update On 2021-05-19 19:18:00 IST
திருவண்ணாமலை அருகே ரிமோட் கார் வாங்குவதற்காக சேமித்த பணத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய 6-ம் வகுப்பு மாணவனை கலெக்டர் பாராட்டினார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை திருவூடல் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார், கூலி தொழிலாளி. இவரது மனைவி ஞானசவுந்தரி, ஆசிரியை. இவர்களுக்கு ஞானசம்பந்தன் (வயது 17), மாணிக்கவாசகம் (11) என 2 மகன்கள் உள்ளனர். ஞானசம்பந்தன் 12-ம் வகுப்பும், மாணிக்கவாசகம் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மாணிக்கவாசகம் தான் ரிமோட் கார் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வந்த பணத்தை தமிழக முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாணவன் மாணிக்கவாசகம், தனது அண்ணன் ஞானசம்பந்தனுடன் நேற்று சைக்கிளில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, கலெக்டர் சந்தீப்நந்தூரியை நேரில் சந்தித்து தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் பிறந்த நாளான்று தந்தை வழங்கிய ரூ.200 உள்பட ரூ.1400-ஐ வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் பணத்தை முதல்- அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி விடுவதாக தெரிவித்து, மாணவனை பாராட்டினார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் முககவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Similar News