செய்திகள்
மருந்து கடைக்கு சீல்

அனுமதியின்றி நடத்தியதாக கூறி மருந்து கடைக்கு ‘சீல்' வைத்த நகராட்சி அதிகாரிகள்

Published On 2021-05-18 10:02 GMT   |   Update On 2021-05-18 10:02 GMT
கூடலூரில் அனுமதி யின்றி நடத்தியதாக மருந்து கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர். இதையடுத்து கடையை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:

கொரோனா பரவலை தடுக்க தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று கூடலூரில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காலை 6 மணி முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என நகராட்சி அலுவலர்கள் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர்.

அப்போது கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர். அங்கு திறந்திருந்த மருந்து கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சென்று சோதனை செய்தனர். தொடர்ந்து நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் மருந்து கடை நடத்தப்படுவதாக கூறி சீல் வைத்தனர். அப்போது கடை உரிமையாளருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு அந்த பகுதியில் உள்ள மருந்து கடை வியாபாரிகள் வந்தனர். பின்னர் மருந்து கடைக்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீரென கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசிங் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருந்துக்கடைகள் நடத்துவதற்கு துறை ரீதியாக உரிமங்கள் பெறப்பட்டுள்ளது. நகராட்சியிடம் உரிமம் பெற வேண்டியதில்லை என தெரிவித்தனர். மேலும் சீல் வைத்த கடையை திறந்ததால் மட்டுமே மற்ற கடைகளை திறப்போம் என்றும் கூறினர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் கடைக்கு வைத்த சீலை அகற்றினர்.

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்து வாங்க வந்த பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.
Tags:    

Similar News