செய்திகள்
சிறுத்தை

மஞ்சூர் அருகே சிறுத்தை தாக்கி பசுமாடு பலி

Published On 2021-05-14 09:53 GMT   |   Update On 2021-05-14 09:53 GMT
தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று பசுமாட்டின் மீது பாய்ந்து அதை கடித்து குதறியது. சிறுத்தையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. இப்பகுதியை சேர்ந்தவர் நடராஜ். தோட்டத்தொழிலாளியான இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது பசுமாடு ஒன்று குடியிருப்பை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று பசுமாட்டின் மீது பாய்ந்து அதை கடித்து குதறியது. சிறுத்தையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு திரும்பாததை கண்டு நடராஜ் மாட்டை தேடி சென்றுள்ளார். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே சிறுத்தையால் கொல்லப்பட்ட மாட்டின் உடல் கிடந்துள்ளது. இதை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து கால்நடை மருத்துவர் ராஜமுரளி தலைமையிலான மருத்துவகுழுவினர் மாட்டின் உடலை பிரேதபரிசோதனை நடத்தினார்கள். சிறுத்தையால் கொல்லப்பட்ட மாடு சினையாக இருந்துள்ளது சுமார் 10நாட்களில் குட்டியிடும் நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் தனக்கு சொந்தமான 5மாடுகள் சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக நடராஜ் கவலையுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News