செய்திகள்
கைது

சுங்கச்சாவடியில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2021-05-12 18:17 GMT   |   Update On 2021-05-12 18:17 GMT
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் விநாயகம், மணிவண்ணன் உள்ளிட்ட போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து வேலூரை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று சுங்கச்சாவடியில் வந்து நின்றது.

சந்தேகம் அடைந்த போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் லாரியைபோலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்.

சோதனையில் தார்பாய் போட்டு மூடியபடி 200 பண்டல்களில் சுமார் ஒரு 3 டன் குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் லாரியுடன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் கே.எச்.எம்.பிளாக் பகுதியைச் சேர்ந்த சைமன் மகன் வெங்கடேஷ் (வயது 28) என்பதும், உடன் இருந்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் சூரியமூர்த்தி (23) என்பதும் தெரியவந்தது.

மேலும் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வெங்கடேஷ் மற்றும் சூரியமூர்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News