செய்திகள்
கோப்பு படம்

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் 150 ஆக அதிகரிப்பு

Published On 2021-05-12 13:35 GMT   |   Update On 2021-05-12 13:35 GMT
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் 150 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரம் லிட்டர் டேங்க் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் 140 பேருக்கு மேல் தொற்று உறுதியாகி வருகிறது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து உள்ளது. ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உதவியுடன் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் ஐ.சி.யூ. வார்டில் 20 படுக்கைகள் உள்ளது. கொரோனா பாதித்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கில் ஆக்சிஜன் சேமித்து வைக்கப்படுகிறது. நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் 10 லிட்டர் திரவ ஆக்சிஜன் வரை தேவைப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு கூடுதலாக ஆக்சிஜன் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசின் சுகாதார துறையிடம் அனுமதி பெற்று 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் வைக்க தளம், தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து ஊட்டிக்கு லாரி மூலம் ஆக்சிஜன் டேங்க் கொண்டு வரப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட தளத்தில் கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்டது. இதனை பொருத்தும் பணி மற்றும் டேங்கில் இருந்து குழாய்கள் மூலம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறும்போது 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் பேர் என்பதால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 110-ல் இருந்து 150 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் 106 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர் என்றார்.
Tags:    

Similar News