செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வார்டில் பணிபுரியும் டாக்டர்கள் கிளினிக்கில் மருத்துவம் பார்க்க கூடாது- கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2021-05-10 10:21 GMT   |   Update On 2021-05-10 10:35 GMT
கொரோனா வார்டில் பணிபுரிந்து பின்னர் ஒரு வாரம் தனிமைப்படுத்துதலில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்களிடம் பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டாம்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவ மனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் பணிபுரியும் டாக்டர்கள் பணிக்கு பின்னர் தனிமைப்படுத்தி கொள்ள 7 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் டாக்டர்கள் தங்களது வீடுகளில் தான் இருக்க வேண்டும்.

தங்களது சொந்த கிளினிக்கில் எந்த காரணம் கொண்டும் மருத்துவம் பார்க்க கூடாது. ஆனால் சில அரசு டாக்டர்கள் தங்களது சொந்த கிளினிக்குகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, தனிமைப்படுத்தி கொள்ளும் நாட்களில் தங்களது சொந்த கிளினிக்கில் தனியார் அல்லது அரசு டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டால் அந்த கிளினிக்குகளுக்கு சீல் வைக்கும்படி உதவி கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே கொரோனா வார்டில் பணிபுரிந்து பின்னர் ஒரு வாரம் தனிமைப்படுத்துதலில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்களிடம் பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டாம்.

கொரோனா தடுப்பு விதியை மீறி டாக்டர்கள் யாராவது சிகிச்சை அளித்தால் அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து 94980 35000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைக்கலாம்.

இந்த தகவலை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News