செய்திகள்
வேலி அமைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

கொரோனாவுக்கு பலியான அரசு ஊழியர் உடலை ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் எதிர்ப்பு

Published On 2021-05-09 04:01 GMT   |   Update On 2021-05-09 04:01 GMT
கொரோனாவுக்கு பலியான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலையில் வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் 67 வயது முதியவர். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் மற்றும் அவருடைய மனைவி, மகன், மருமகள், மருமகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், மனைவி, மகன், மருமகன் ஆகியோர் பெரம்பலூர் தனியார் ஆஸ்பத்திரியிலும், மருமகள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் கொரோனாவால் இறந்தவர்களை இங்கு கொண்டு வந்து அடக்கம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இடுகாட்டுக்கு செல்லும் வழியான அப்பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே சாலையை வேலியால் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனாவால் இறந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் உடலை இந்த வழியாக கொண்டு வரக்கூடாது என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அதற்கு போலீசார் இறந்தவர் உடலை மாற்று வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து காந்தி நகர் பின்புறம் வழியாக ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் உடல், இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News