செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி

சென்னையில் இருந்து நீலகிரிக்கு 9 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது

Published On 2021-05-07 11:21 GMT   |   Update On 2021-05-07 11:21 GMT
நீலகிரியில் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 649 பேரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வந்தது. இதற்கிடையே தடுப்பூசி இல்லாததால் 2 நாட்கள் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து நீலகிரிக்கு கூடுதலாக கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2-வது டோஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் நடந்தது.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-

நீலகிரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தினமும் 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது 1,700 பேருக்கு தினமும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் முடிவுகள் ஒரே நாளில் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக கருவிகள் வரவழைக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 9 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு உள்ளது. நீலகிரியில் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 649 பேரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றார்.
Tags:    

Similar News