செய்திகள்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி

நோயாளிகள் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை- கலெக்டர் விளக்கம்

Published On 2021-05-05 09:56 GMT   |   Update On 2021-05-05 09:56 GMT
நோயாளிகளின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூறினார்.
செங்கல்பட்டு:

கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் பரவி உள்ளது. வட மாநிலங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெயில், ராணுவ விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,608 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேர் கொரோனாவால் பலியானார்கள்.

மாவட்டத்தில் இதுவரை 86,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75,621 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 9,663 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 380 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது.

நேற்று இரவு 10 மணி அளவில் கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது.



இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, மறைமலைநகரில் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடுகள் செய்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகளில் இருந்த ஆக்சிஜனையும் நோயாளிகளுக்கு பயன்படுத்தினர்.

இதனால் இங்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் பல நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். மொத்தம் 13 நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னரே ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்துபோன நோயாளிகளில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எனவும், ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளி எனவும் தெரிகிறது.

13 நோயாளிகள் பலியானது பற்றி அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் அந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அவர் நோயாளிகள் இறப்பு குறித்தும், ஆக்சிஜன் இருப்பு பற்றியும் அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து கலெக்டர் ஜான்லூயிஸ் கூறும்போது, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை. போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது.

நோயாளிகளின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் பயப்பட வேண்டாம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 13 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன.

இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுப்பட வேண்டும்.

மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையை தமிழக அரசு நிர்வாகம் இதன் பிறகாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

உயிரிழந்த நோயாளிகளில் ஒருவரது உறவினர் கூறும்போது, ‘ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற எனது தந்தை மூச்சு விட மிகவும் சிரமப்பட்டார். இதுபற்றி டாக்டர்களிடம் கூறியபோது, ஆக்சிஜன் இல்லை. விரைவில் வந்துவிடும் என்று எந்தவித பதட்டமும் இல்லாமல் தெரிவித்தனர்’ என்றார்.

ஏற்கனவே தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
Tags:    

Similar News