செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் பொதுமக்கள் - ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் போட்டுக்கொண்டனர்
கொரோனா வைரஸ் அச்சத்தால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோன வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாநில அரசு வாரத்தில் 6 நாட்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட பொதுமக்கள் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாலும், தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா 2-வது அலை அச்சத்தாலும் கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை 8 மணிக்கு பொதுமக்கள் குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து செவிலியர்கள், பொதுமக்களிடம் ஆதார் அட்டை எண் பெற்றுக்கொண்டு அவர்களது விருப்பத்திற்கேற்ப கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை போட்டனர்.
நேற்று மட்டும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 6 தனியார் மருத்துவமனைகள், 111 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் ஒரே நாளில் 3,055 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 96 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.