செய்திகள்
சோதனைச்சாவடியில் போலீசார் வாகனங்களில் வருபவர்களை இ-பாஸ் உள்ளதா? என்று சோதித்து அனுமதி அளித்தனர்.

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்

Published On 2021-04-26 09:43 IST   |   Update On 2021-04-26 09:43:00 IST
கர்நாடக மாநிலத்தில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வரக்கூடிய வாகனங்களை தீவிரமாக சோதனை செய்திட கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி வெளிமாநிலங்களில் வரக்கூடிய பொதுமக்கள் அரசு அனுமதிபெற்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்த மாநிலங்களில் இருந்து வருவதற்கும், இ-பாஸ் கட்டாயம் என, நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள கர்நாடக மாநிலத்தில் நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வரக்கூடிய வாகனங்களை தீவிரமாக சோதனை செய்திட கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதில் ஒரு பகுதியாக சோதனைச்சாவடிகளில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் வெளிமாநில வாகனங்களை கண்காணிக்கவும், சோதனை செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு சோதனைச்சாவடிகளுக்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழக - கர்நாடகா எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியில், தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.

பிற மாநில கார், வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழகத்ததுக்குள் அனுமதிக்கப்பட்டன.


இதையடுத்து ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று முதல், பிற மாநில பதிவு எண்ணுடன் வரும் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை, இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. சரக்கு மற்றும் அத்தியவசிய தேவைகளுக்கான வாகனங்களை, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகள் அனுமதித்தனர். கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

Similar News