செய்திகள்
வாகன ஓட்டிகளிடம் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

35 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு

Published On 2021-04-26 08:03 IST   |   Update On 2021-04-26 08:03:00 IST
கடலூர் மாவட்டத்தில் 35 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
கடலூர்:

கொரோனா பரவலை தடுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் தடையை மீறி சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 35 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து, அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளில் அபராதம் வசூலித்தனர். இது தவிர போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்தியாவசிய தேவைக்காக வந்தவர்களை உரிய விசாரணை செய்து அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு சென்றவர்களை திருமண அழைப்பிதழை காண்பித்த பிறகே அனுமதித்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Similar News