செய்திகள்
கோப்புப்படம்

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,782 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-25 23:34 IST   |   Update On 2021-04-25 23:34:00 IST
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநில அரசுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,782 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநில அரசுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து போலீசார், வருவாய்த்துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

மேலும் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் 26 குழுக்களாக பிரிந்து கிராமம் கிராமமாக சென்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகளிலும், 103 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 9 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 635 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 97 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 23 ஆயிரத்து 538 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

அதாவது வயது அடிப்படையில் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட 1,640 பேரும், 25 முதல் 40 வயது வரையுள்ள 10 ஆயிரத்து 215 பேரும், 40 வயது முதல் 60 வயது வரையுள்ள 57 ஆயிரத்து 378 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 36 ஆயிரத்து 662 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 2,782 போ் தடுப்பூசி போட்டுள்ளனா். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Similar News