ஓசூரில் சிறிய வீடுகளில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களால் வேகமெடுக்கும் கொரோனா
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தினமும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளை தேடி நோயாளிகள் படை யெடுக்கும் அவலம் தொடர்கிறது.
ஓசூரில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஒசூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 5 லட்சத்தைக் கடந்து விட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் தொழிற்சாலை வாகனங்களில் தினமும் வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.
ஒசூரில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள பிற மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து விட்டது.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு சிறப்பு ரெயில் மூலம் சென்றனர். பின்னர் கொரோனா தொற்று குறைந்ததால், திரும்பி வந்த தொழிலாளர்கள் தற்போது 2-வது தலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ஒசூரில் உள்ள தனியார் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 323 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில், ஒசூரைச் சேர்ந்தவர்கள் மட்டும் 250 பேருக்கு மேல் உள்ளனர். ஒசூரில் தினந்தோறும் சுமார் 200 முதல் 250 பேருக்கு கொ ரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இவர்கள் அனைவரும் ஒசூரில் உள்ள அரசு மருத்துவமனை தனியார் மருத்துவ மனைகளை நாடி வருகின்றனர். அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் படுக்கைகள் நிரம்பிவிட்டன. எனவே 100 முதல் 150 பேர் வரை தினந்தோறும் ஒசூர் அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அவர்களை ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோதித்து, குறைந்த தொற்று உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு திருப்பி அனுப்புகின்றனர்.
மேலும், தொற்று கடுமையான உள்ளவர்களையும், ஆக்சிஜன் தேவைப்படுபவர்களையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மருந்துவ மனைகளுகுகுச் செல்லும்படி அறிவுரை கூறி வருகின்றனர்.
ஒசூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலோர் சிறிய வீடுகளில் வசித்து வருவதால், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,
எனவே, கொரோனா தொற்றாளர்களுக்கு சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதை உடனே செயல்படுத்த வேண்டும். இதுதவிர, ஒசூரில் இயங்கி வரும் ஒசூர் இ.எஸ்ஐ. மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.