செய்திகள்
கொத்தடிமைகளாக வேலை பார்த்தவர்களிடம் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்திய காட்சி

கந்தர்வகோட்டையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மீட்பு

Published On 2021-04-22 19:02 IST   |   Update On 2021-04-22 19:02:00 IST
கந்தர்வகோட்டையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மீட்கப்பட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே பகட்டுவான்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலை பார்ப்பதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய்த்துறையினர், தொழிலாளர் துறையினர், போலீசார், குழந்தைகள் நலக்குழுமத்தினர் உள்பட அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது 2 குடும்பத்தினர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

அவர்கள் திருவண்ணமாலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது28)-ஜெயா தம்பதி மற்றும் எல்லப்பன் (31) அவரது மனைவி உமா, அவர்களது குழந்தைகள் 3 பேர் என தெரிய வந்தது. இதில் சுரேஷ், எல்லப்பன் ஆகியோர் தலா ரூ.30 ஆயிரம் முன் பணம் வாங்கி கொண்டு இங்கு வந்து வேலை பார்த்ததும், வேலைக்கு கூலி வழங்காமல் கொத்தடிமைகளாக கொடுமைப்படுத்தி நடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 7 பேரையும் அதிகாரிகள் மீட்டு கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து பின் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்டவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் விசாரணை நடத்தினார். மேலும் அரசு தேவையான உதவிகளை செய்யும் என அவர் கூறினார். 2 குடும்பத்தினரையும் பத்திரமாக இரவில் தங்க வைத்த பின் இன்று (வியாழக்கிழமை) அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்கிய மேஸ்திரி மற்றும் தோட்டத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

Similar News