செய்திகள்
கைது செய்யப்பட்ட அய்யப்பனுடன் (நடுவில் இருப்பவர்) போலீசார்.

காரைக்காலில் டாக்டர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

Published On 2021-04-16 07:03 GMT   |   Update On 2021-04-16 07:03 GMT
காரைக்காலில் அரசு டாக்டர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 24 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
காரைக்கால்:

காரைக்கால் நேருநகர் விரிவாக்கம் முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அலமாரியில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை திருடி சென்றனர்.

இதுகுறித்து காரைக்கால் நகர போலீசில் செல்வம் புகார் செய்தார். அதன்பேரில் காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார், நகைகள் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தனிப்படையினர் காரைக்கால் நேரு நகரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றிய வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பிடிபட்டவர், காரைக்கால் திருநகரைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 31) என்பதும், டாக்டர் வீட்டில் 50 பவுன் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

திருடிய நகைகளை அய்யப்பன், நாகப்பட்டினம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று 24 பவுன் நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News