செய்திகள்
புதுவை கவர்னர் தமிழிசை

புதுவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு- கவர்னர் தமிழிசை எச்சரிக்கை

Published On 2021-04-15 11:37 GMT   |   Update On 2021-04-15 11:42 GMT
முக கவசத்தை சரியானபடி அணிந்தால், கொரோனா நம்மை விட்டு பயந்து ஓடும் என்று புதுவை கவர்னர் தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கெரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

புதுவையில் கடந்த 11-ந் தேதி இந்த திருவிழா தொடங்கியது. 3 நாட்களில் 33 ஆயிரத்து 904 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்த தடுப்பூசி முகாம் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில் மேலும் 4 நாட்கள் நீடித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதுவையில் பலர் முக கவசம் அணியாமல் செல்கிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுவை - கடலூர் மெயின் ரோடு கிருமாம்பாக்கத்தில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை உள்ளது.

இந்த மருத்துவமனையும், புதுச்சேரி அரசு நலவழித் துறையும் இணைந்து இலவச கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. இதனை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 100-ல் 64 பேர் வாய்க்கும், 20 பேர் கழுத்துக்கும் தான் முககவசம் அணிகின்றனர். வெறும் 16 பேர் தான் சரியாக முககவசம் அணிகின்றனர்.


முக கவசத்தை சரியானபடி அணிந்தால், கொரோனா நம்மை விட்டு பயந்து ஓடும். வீட்டில் இருக்கும், போதும் வெளியில் செல்லும் போதும் மூக்கு, வாயை மூடிதான் முகவசகம் போட வேண்டும். மூக்கு-வாயை திறந்து வைத்தால், கொரோனா எளிதாக நம் உடலுக்கும் சென்று விடும்.

முதல் முதலில் பிரதமர் மோடி ஊரடங்கு அறிவித்த போது, கொரோனா நோய் பற்றி நமக்கு அவ்வளவு தெரியாது. எப்படிப்பட்ட நோய், எதுவழியாக போகும், எந்த உறுப்பபை தாக்கும், எவ்வளவு உயிருக்கு அபாயகரமானது. மருந்து என்ன, எப்படிபட்ட மருந்து இதனை கட்டுப்படுத்தும் என்பது தெரியாது.

ஊரடங்கின் போது, நாம் வீட்டில் இருந்தால், தெருவில் நடமாடும் கொரோனா நம்மை தொற்றாது என்ற காரணத்திற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் மக்கள் சிரமப்படுவார்கள் என தெரிந்து தான் ஊரடங்கு போட்பட்டது. ஏனென்றால், மக்கள் உயிருடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் பிறக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஒரு வருடமாக நாம் கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது, கொரோனா பற்றி நமக்கு தெரிந்து விட்டது. தடுப்பூசியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தெரிந்தும் முககவசம் அணியாமல் இருப்பது தவறு. கொரோனால் வெளியில் நீண்ட நாள் உயிர் வாழமுடியாது.

முக கவசம் அணியாதவர்கள் சமுகத்தின் எதிரிகள். ஒருவர் முக கவசம் அணியவில்லை என்றால், உடனே 46 பேருக்கும், 2 வாரங்களில் 406 பேருக்கு கொரோனா பரப்பி விட வாய்ப்புள்ளது.

மற்றவர்களுக்கு பரப்ப நமக்கு உரிமை கிடையாது. முக கவசம் போடவில்லை என்றால், சமூக கேடு, சமுக விரோதம். அதனால், புதுவையில் முக கவசம் போடாமல் நடமாட யாருக்கும் உரிமை கிடையாது.

உணவு சாப்பிடும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் முக கவசத்தை கழட்ட கூடாது. முக கவசம் போடவில்லை என்றால், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. அப்படியே கொரோனா வந்தாலும் அதிகமாக பாதிக்காது. சத்தான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, பூண்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி உலகில் வேறு எதிலும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விநாயகா மி‌ஷன் நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஷ்வரி, மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங், சுகாதார துறை இயக்குனர் டாக்டர் மோகன் குமார், பதிவாளர் பெருமாள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தீபா நன்றி கூறினார்.
Tags:    

Similar News