செய்திகள்
கொரோனா தடுப்பூசி

7 அடையாள அட்டைகளை காட்டி தடுப்பூசி போடலாம்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

Published On 2021-04-13 10:22 GMT   |   Update On 2021-04-13 10:22 GMT
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏப்ரல் 1-ந்தேதி முதல் அரசால் இலவசமாக செலுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை மக்கள் அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி முகாம் கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் நாளை வரை புதுவை மாநிலத்தில் நடத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை கொடுத்து போட்டுக்கொள்ளலாம்.

அதாவது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியதாரர் அடையாள அட்டை ஆகிய 7 அடையாள அட்டைகளை கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி இந்த தடுப்பூசியினை எடுத்துக்கொள்ளலாம். புதுச்சேரியை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற பொதுமக்கள் தங்களது பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான மீன் மற்றும் காய்கறி கடைகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கடைக் காரர்கள், விற்பனையாளர்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். மேலும் கடைகளில் 6 அடி இடைவெளி விட்டு நிற்பதற்கான அடையாள குறிகளை வரைந்து வைக்கவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News