செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஓட்டல்- விடுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு சிறப்பு சலுகை- 10 சதவீதம் தள்ளுபடி

Published On 2021-04-09 06:57 GMT   |   Update On 2021-04-09 07:51 GMT
முகாமில் தகுதி உள்ள அனைவரும் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என புதுவை அரசின் சுகாதாரத்துறை செயலர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி:

கவர்னர் தமிழிசை அறிவுறுத்தலின் பேரில் புதுவையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து ஓட்டல் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. 16-ந்தேதி வரை முகாம் நடத்தப்படுகிறது.

இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

நாளை (சனிக்கிழமை) வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

13-ந்தேதி பாண்லே ஊழியர்கள், குடும்பத்தினருக்கும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

முகாமில் தகுதி உள்ள அனைவரும் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என புதுவை அரசின் சுகாதாரத்துறை செயலர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே வெளி மாநிலத்தவர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்து ஓட்டல் மற்றும் விடுதிகளில் தங்கினால் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் சமர்பித்தால் உணவு மற்றும் ஓட்டல் அறை வாடகையில் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக புதுவை விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News