செய்திகள்
கோப்புபடம்

கே.வி.குப்பம் அருகே மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்று உடல் எரிப்பு - திருட்டு வழக்கில் சிறைசென்று திரும்பியவர் கைது

Published On 2021-03-24 22:47 IST   |   Update On 2021-03-24 22:47:00 IST
கே.வி.குப்பம் அருகே மூக்குத்திக்காக மூதாட்டியை கொலை செய்து, உடலை எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
கே.வி.குப்பம்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த பெருமாங்குப்பம் கிராமம், கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி ரகுமணி (வயது 80). சின்னசாமி இறந்துவிட்டதால் ரகுமணி தனியாக வசித்து வந்தார். பெருமாங்குப்பம் கிராமத்தின் அருகில் உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (37). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்.

திருட்டு வழக்கு தொடர்பாக சிறை சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரகுமணி வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த குமார் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ரகுமணி தன்னிடம் பணம் இல்லை என்று கூறி பணம்தர மறுத்துவிட்டார்.

பின்னர் இதுகுறித்து ரகுமணி தனது உறவினர் ஆலங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயகோபி என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூதாட்டியிடம் குமார் மீண்டும் பணம் கேட்டுள்ளார். அப்போதும் ரகுமணி பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த குமார், மூதாட்டியின் தலையை சுவரில் மோதியும், தரையில் அடித்தும் கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டி ரகுமணி அணிந்திருந்த அரை பவுன் மூக்குத்திகளை கழற்றிக் கொண்டார்.

பின்னர் கொலையை மறைக்க பழைய துணிகளை மூதாட்டி உடல்மீது போர்த்தி, அங்கிருந்த பாமாயிலை ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

வழக்கம்போல பாட்டியை பார்ப்பதற்காக நேற்று காலையில் ஜெயகோபி வந்துள்ளார். அப்போது வீடு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பாட்டி எங்கோ வெளியே சென்றுள்ளார் என்று காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகப்பட்டு வீட்டைத் திறந்து பார்த்தார்.

அப்போது ரகுமணி கொலைசெய்யப்பட்டு அரைகுறையாக எரிந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் மூதாட்டியின் தம்பி மருமகன் ஜெயகோபி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குமாரை கைது செய்தார்.

மேலும் ரகுமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மூக்குத்திக்காக மூதாட்டியை கொலை செய்து எரித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News