செய்திகள்
தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. மருதவள்ளிபாளையம் கிராமத்தில் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தி அளிக்கப்படும் - ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.

Published On 2021-03-21 20:55 IST   |   Update On 2021-03-21 20:55:00 IST
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தி அளிக்கப்படும் என அணைக்கட்டு தொகுதி தி.மு.க வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.
வேலூர்:

அணைக்கட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட புத்தூர், பொய்கை, சத்தியமங்கலம், இலவம்பாடி, மருதவள்ளிபாளையம், வல்லண்டராமம் வசந்தநடை, செதுவாலை, விரிஞ்சிபுரம், இறைவன்காடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். குடிசை கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம் என கூறுகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நீங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்தீர்கள். ஆனால் அப்போது உதவி செய்யாத அரசு ஆட்சிக்கு வந்தால் உதவி செய்கிறேன் என இப்போது கூறுகிறது. அப்போதே கொடுக்க முடியாதவர்கள் இப்போது எப்படி கொடுப்பார்கள்.

கொரோனா ஊரடங்கின்போது 3 மாதங்களாக அணைக்கட்டு தொகுதி முழுவதும் 18 ஆட்டோக்களில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு, துப்புரவு பணியாளர்களுக்கு, ஆட்டோ டிரைவர்களுக்கு என் சொந்த செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தி அறிவிக்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்படும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்தவற்றை கண்டிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவார். எனவே நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

பிரசாரத்தின் போது அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் குமரபாண்டியன், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் மலர்விழி லோகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News