செய்திகள்
வருமானவரி துறை

கடலூரில் அதிமுக நிர்வாகிகள் 5 பேர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

Published On 2021-03-19 08:16 IST   |   Update On 2021-03-19 08:16:00 IST
கடலூரில் அதிமுக நிர்வாகிகள் 5 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் கடலூர் நகரில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், வருமானத்திற்கு அதிகமாக பணம் வைத்திருப்பதாகவும், தேர்தலையொட்டி அதனை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாகவும் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கடலூர் அதிகாரிகளுடன் இணைந்து 6 குழுக்களாக பிரிந்து, நேற்று காலை 10.30 மணி அளவில் ஒரே நேரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடலூர் எஸ்.என்.சாவடியில் உள்ள ஜெயலலிதா பேரவை பொருளாளர் மதியழகன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வன், புதுப்பாளையத்தில் உள்ள வக்கீல் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சுரேஷ், நிர்வாகி சரவணன் ஆகியோர் வீடுகளுக்குள் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், வீடுகளின் கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை பூட்டினர்.

பின்னர் வீடுகள் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

மேலும் வக்கீல் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த சோதனை நேற்று மாலை 6 மணி வரை நடந்தது. இதில் பணம், ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஆவணங்களும் சிக்கவில்லை.

இருப்பினும் கடலூரில் நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News